மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்ததால் விபத்து, ஆட்டோ கவிழ்ந்து முதியவர் சாவு - 6 பேர் படுகாயம்

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து முதியவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-04-24 22:45 GMT
நிலக்கோட்டை, 

நிலக்கோட்டை அருகே உள்ள மல்லணம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மதுரை-பெரியகுளம் சாலையில் மீனாட்சிபுரம் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு செல்வதற்காக ஆட்டோவின் முன்பு குறுக்காக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் மீது மோதாமல் இருப்பதற்காக கனகராஜ், பிரேக் போட்டு ஆட்டோவை நிறுத்த முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த அழகாபுரியை சேர்ந்த பழனிச்சாமி (40), நாகேந்திரன் (42), மச்சக்காளை (32), சாமியான் (86), காமயன் (65), மல்லணம்பட்டியை சேர்ந்த செல்வராணி (35), பங்களாபட்டியை சேர்ந்த ஊர்காலன் (31) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் கனகராஜ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதையடுத்து 7 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் காமயன் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்