மயானத்திற்கு செல்லும் பாதை மண் குவித்து தடுப்பு: போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டி உடல் அடக்கம்

மயானத்திற்கு செல்லும் பாதையில் மண் குவித்து தடுக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டி உடல் அடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2019-04-24 22:30 GMT
சேந்தமங்கலம், 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது பழையபாளையம் ஊராட்சி. இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மயான இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை சுற்றி விவசாய நிலம் உள்ளது. மேலும் மயானத்திற்கு செல்வதற்கு 3 அடி அகலத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி விவசாய நிலத்தினர் சிலர் இறந்த உடல்களை இவ்வழியாக கொண்டு செல்லக்கூடாது என கம்பி வேலி தடுப்பு அமைத்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் இறந்ததையடுத்து அவரது உடலை அந்த சமூகத்தினர் கொண்டு சென்றனர். அப்போது கம்பி வேலியை உடைத்துவிட்டு அவர்கள் உடலை அடக்கம் செய்தனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் அபாயம் இருந்ததால் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வந்தது.

இதற்கிடையே மயானத்திற்கு செல்லும் வழியில் மணலை குவித்து சிலர் வைத்து தடுத்துள்ளனர். நேற்று முன்தினம் அந்த சமூகத்தினரை சேர்ந்த ஆண்டம்மாள் (வயது 70) என்பவர் இறந்தார். இதைத் தொடர்ந்து மூதாட்டியின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய அப்பகுதியினர் சேந்தமங்கலம் போலீசில் பாதுகாப்பு கேட்டனர்.

அதன் பின்னர் நேற்று காலை முதல் மாலை வரை மயானத்திற்கு செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்