கல்லூரி மாணவரை கொலை செய்த வழக்கில் - சிறுவன் உள்பட 4 பேர் கைது

ஆண்டிப்பட்டியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவரை கொலை செய்த சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-24 22:45 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சீத்தாராம்தாஸ் நகரை சேர்ந்தவர் நாகேந்திரபிரசாத் (வயது18). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். கோவில் திருவிழாவுக்காக கடந்த வாரம் நாகேந்திரபிரசாத் சொந்த ஊருக்கு வந்தார்.

கடந்த 21-ந்தேதி தனது நண்பர்களுடன் தேனிக்கு சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியே சென்றார். இந்நிலையில் அவரது வீட்டின் பின்புறத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில், ரத்த காயங் களுடன் நாகேந்திரபிரசாத் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பாலகுரு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சீத்தாராம்தாஸ்நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் (22), நவநீதகண்ணன்(21), ஆண்டிப்பட்டி பூக்கார தெருவை சேர்ந்த பாலாஜி (19) மற்றும் ஆண்டிப்பட்டி பூக்காரத்தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நாகேந்திரபிரசாத்தை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறும்போது, நாகேந்திரபிரசாத்தும், கைது செய்யப்பட்ட 4 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் 5 பேரும் சம்பவ இடத்தில் அமர்ந்து மதுபானம் குடித்தனர். அப்போது அவர் களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மதுபாட்டிலால் நாகேந்திரபிரசாத்தின் தலையில் அடித்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என்றனர்.

மேலும் செய்திகள்