பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? போலீசுக்கு போன் செய்து தொல்லை கொடுத்தவர் கைது - தனிப்படையினர் மடக்கி பிடித்தனர்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கடந்த ஒரு மாதமாக போலீசுக்கு போன் செய்து தொல்லை கொடுத்த நபரை தனிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;
இடிகரை,
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை, சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரத்தில் ஒரு நபர் போன் செய்து தொல்லை கொடுத்து வந்தார். அதாவது இரவு 11 மணிக்கு மேல் போன் செய்யும் அந்த நபர், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று வெளியே சொல்ல முடியாத சில வார்த்தைகளை கூறி திட்டி உள்ளார்.
அதுபோன்று துடியலூர் அருகே சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார், அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்றும், போலீஸ் நிலையங்களே தேவையில்லை என்றும் அந்த நபர் பேசியதுடன், சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். இதனால் இந்த போலீஸ் நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 11 மணிக்கு போன் வந்துவிட்டால் அதை எடுக்க சில போலீசார் தயக்கம் காட்டி வந்தனர்.
இதையடுத்து போலீசார் உஷாரானார்கள். இரவு 11 மணிக்கு அந்த நபர் போன் செய்ததும், உடனடியாக அந்த நம்பர் குறித்து விசாரணை செய்தபோது அது செல்போனில் இருந்து பேசப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இவ்வாறு பலமுறை அந்த ஆசாமி தனது செல்போன் எண்களை மாற்றிவிட்டு, போலீசாருக்கு கடந்த ஒரு மாதமாக தினமும் இரவு நேரத்தில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனவே அந்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ரகசியமாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அந்த நபர் சாய்பாபாகாலனி போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சில அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி போலீசாரை திட்டியதாக கூறப்படுகிறது. அந்த நபரை பிடிக்க வியூகம் வகுத்த போலீசார், எதிர்முனையில் பேசிய போலீஸ்காரரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்படி கூறினார்கள்.
இதையடுத்து போலீசார் அந்த நபர் எந்த பகுதியில் இருந்து பேசுகிறார் என்பது குறித்து கண்காணித்தபோது அவர், கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து பேசுவது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அந்த பகுதியில் விசாரணை நடத்தியபோது, ஒரு நபர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதேப்பகுதியை சேர்ந்த செல்லசாமி என்பவரின் மகன் வேல்குமார் (வயது 40) என்பதும், எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அத்துடன் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதும், இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு, தனது செல்போன் மூலம் போலீஸ் நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சாய்பாபாகாலனி போலீசார் வேல்குமார் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் வேல்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, குடிப்பழக்கத்துக்கு அடிமையான வேல்குமார் தினமும் இரவில் குறைந்தது 15 நிமிடங்கள் போன் செய்து போலீசாருக்கு தொல்லை கொடுத்து உள்ளார். இதற்காக அவர் 10-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தி உள்ளார். அந்த சிம்கார்டுகள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றனர்.