மாணவியை கடத்தி திருமணம்: கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை கடத்தி திருமணம் செய்த கட்டிட மேஸ்திரியை போக்சோ சட்டத்தின் கீழ் பென்னாகரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி பாலக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையில் அவர் சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த மாணவிக்கும், சேலம் நெய்காரப்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி தங்கதுரை (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த மாணவி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக மாணவியின் தாயார் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சேலத்தை சேர்ந்த தங்கதுரை தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கதுரை மற்றும் மாணவியை தேடினார்கள். பென்னாகரம் அருகே தலைமறைவாக இருந்த தங்கதுரையை போலீசார் பிடித்தனர். அந்த மாணவியை அவரிடம் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பான விசாரணையில் தங்கதுரை மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து தங்கதுரையை பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்(போக்சோ) கீழ் போலீசார் கைது செய்தனர்.