மகிழ்ச்சி தரும் ‘வொண்டர் பஸ்’ சவாரி
தரையில் சாதாரண பஸ் போல சக்கரத்துடன் செல்லும் இந்த பஸ் நீரினுள் படகு போல மிதக்கும்
நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து நகராமல் சாலைகளின் எழில்மிகு காட்சிகளையும், கடலின் கண்கவர் காட்சிகளையும் கண்டு ரசிக்க முடியுமா?. நீங்கள் இந்த கோடை விடுமுறைக்கு துபாய் சென்று வர திட்டமிட்டால் இவை அனைத்துமே சாத்தியம். துபாயின் எழில் மிகு சாலைகள், அதில் வானுயர்ந்த கட்டிடங்களைக் கண்டு ரசித்தபடியே நீங்கள் பயணிக்கும் பஸ் திடீரென கடல் நீரில் சென்றால் எப்படியிருக்கும். நீங்கள் பயணிக்கும் பஸ் கடலிலும் மிதந்து செல்லும். இந்த வொண்டர் பஸ் பயணத்தை உங்கள் குடும்பத்தினருடன் ரசிக்கலாம்.
தரையில் சாதாரண பஸ் போல சக்கரத்துடன் செல்லும் இந்த பஸ் நீரினுள் படகு போல மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சாலைகளில் செல்லும் சொகுசு கார்களைப் பற்றிக் கூறும்போது கப்பலில் பயணிப்பது போன்று அதிர்வுகளே இல்லாமல் சொகுசாக பயணிக்கலாம் என்பார்கள்.
ஆனால் இந்த வொண்டர் பஸ்ஸில் பயணித்தால் நிச்சயம் கப்பல் பயண அனுபவத்தைப் பெறலாம். இந்த சுற்றுலா பஸ்ஸில் பயணிக்கும் போது தரை மார்க்கத்தில் செல்லும்போது எதியாட் அருங்காட்சியகம், துபாய் அருங்காட்சியகம், அல் பாஹித் துறைமுகம், புராதான கிராமம் ஆகியவற்றைப் பார்த்து ரசிக்கலாம்.
கடல் பகுதியை நெருங்கியவுடன் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதைப் போன்று இந்த பஸ் கடலில் செல்ல ஆரம்பித்துவிடும். கடலினுள் செல்லும்போது பாரம்பரிய கிராம், ஷேக் சயீத் வீடு, படகுகள் செல்லும் பாதை, ரூலர் கோர்ட், துபாய் நகராட்சி கட்டிடம், கோல்டு சவுக் உள்ளிட்ட பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்.
ஒவ்வொரு பஸ்ஸிலும் 38 பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மொத்தம் 90 நிமிட பயணம் என்ற வகையில் இந்த வொண்டர் பஸ் சுற்றுலா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் பயணம் உங்கள் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.
இந்த பஸ் முழுக்க முழுக்க ஏ.சி. வசதி கொண்டது. பயணிகள் சவுகரியமாக அமர்வதற்கேற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பஸ்ஸினுள்ளேயே கழிவறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. கடலினுள் செல்வதால் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் செய்யப்பட்டுள்ளன. முற்றிலும் கண்ணாடி ஜன்னல்களைக் கொண்டிருந்தாலும் அதன் வழியே நீங்கள் இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.
அவசர காலத்தில் உதவும் வகையில் நீச்சல் உடை மற்றும் தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்களும் ஒவ்வொரு பஸ்ஸிலும் பயணிக்கின்றனர். அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் உத்திரவாதம் மிக்கதாக இந்த பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.