சிக்கு புக்கு ரெயிலில் சூப்பர் பயணம்
நிலக்கரியில் இயங்கும் புகை வண்டி ரெயில் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை;
1990-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் நிலக்கரியில் இயங்கும் புகை வண்டி ரெயில் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கால திரைப்படங்களை எப்போதாவது காண நேரிட்டால் அதைப் பார்த்து புரிந்து கொண்டால் உண்டு. இல்லையெனில் பிரபுதேவா ஆடிப்பாடிய சிக்கு புக்கு ரெயிலே என்ற பாடலை முணுமுணுத்தால்தான் உண்டு.
ஏனெனில் ஜார்ஜ் ஸ்டீவன்சன் கண்டுபிடித்த நிலக்கரியில் இயங்கும் நீராவி என்ஜின் ரெயில் 1990-களுக்குப் பிறகு சேவையில் ஈடுபடுத்தப்படவேயில்லை. ஆனால் இத்தகைய ரெயிலில் பயணிக்க வாய்ப்பை இன்றைக்கும் வழங்குகிறது ரெயில்வே நிர்வாகம். 1855-ம் ஆண்டு ஓடத் தொடங்கிய முதலாவது புகை வண்டியை சென்னை பெரம்பூரில் உள்ள லோகோ நிர்வாகம் சீரமைத்து 1997-லிருந்து செயல்படத் தகுதியானதாக்கியது.
உலகிலேயே மிகவும் பழமையான பாரம்பரிய ரெயில் இயக்கப்படுவது இந்தியாவில்தான். பேரி குயீன் எக்ஸ்பிரஸ் ( Fairy queen express ) ரெயில் டெல்லியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் வரை இயக்கப்படுகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் சரிக்ஸா வன விலங்கு சரணாலயத்தை பார்க்கும் வாய்ப்பையும் நீங்கள் பெறலாம்.
மொத்தமே 2 பெட்டிகளைக் கொண்டதாக முற்றிலும் ஏ.சி. வசதி கொண்ட ரெயிலாக இது இயக்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 50 பேர் பயணிக்க முடியும். இந்த ரெயிலில் பயணிப்போருக்குத் தேவையான உணவுகளை வழங்குவதற்காக உணவகமும் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில் பெட்டியின் முன் பகுதியில் வராந்தா போன்ற பகுதி முழுவதும் கண்ணாடியால் ஆனது. நான்கு மணி நேர பயணத்தின்போது சுற்றுப்புற அழகை மக்கள் ரசிக்க முடியும்.
ஒரு இரவு, இரண்டு பகல் பொழுதை உள்ளடக்கியதாக இந்த பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாதத்தில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் வரையான காலத்தில் இந்த ரெயிலில் பயணிக்கலாம். ஆல்வாரில் இரவு தங்கும் வசதியை ஐ.ஆர்.சி.டி. ஏற்பாடு செய்துள்ளது. அங்கு கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன விலங்கு சரணாலயத்தில் ஜீப் வாகனம் மூலம் சுற்றிப் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடுமையான வெப்பம் நிலவும் என்பதால் இந்த காலங்களில் இந்த பயணம் அனுமதிக்கப்படுவதில்லை.
அக்டோபரிலிருந்து குளிர்காலம் தொடங்கு வதால் சுற்றுப் புற சூழல் மிகவும் ரம்மியமாக இருப்பதால் அக்டோபர் முதல் மார்ச் வரையான 6 மாத காலம் மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. மாதத்துக்கு 2 சுற்றுலா என்ற வகையில் மொத்தமே 12 பயண திட்டங்கள்தான் இந்த பேரி குயீன் ரெயிலுக்கு வகுக்கப்பட்டுள்ளது. புகை வண்டி ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் குடும்பத்துடன் இதற்கென முன்கூட்டியே திட்டமிடுங்கள். அனுபவம் மிகச் சிறப்பானதாக அமையும்.
இந்த பயணத்திற்கு திட்டமிட்டால் டெல்லி ரெயில் நிலையத்தில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படுவதை உறுதி செய்து பயண திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். காலை 8.40 மணிக்கு டெல்லி கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருக்க வேண்டும். 9.10 மணிக்கு நீராவி என்ஜின் ரெயில் புறப்படும். பகல் 1 மணிக்கு ரெயிலிலேயே மதிய உணவு வழங்கப்படும். மாலை 4 மணிக்கு ஆல்வார் ரெயில் நிலையத்தை அடையும். அங்கு ராஜஸ்தான் சுற்றுலா கழகம் உங்களை வரவேற்று பஸ் மூலம் தங்க வேண்டிய ஓட்டலுக்கு அழைத்துச் செல்லும். இரவு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். மறு நாள் காலை (ஞாயிற்றுக்கிழமை) 6 மணிக்கு புறப்பட்டு தேசிய பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
பிறகு 9.30 மணிக்கு ஓட்டலுக்கு திரும்பி 10 மணிக்கு காலை உணவு அளிக்கப்படும். பிறகு 12 மணிக்கு ஆல்வார் ரெயில் நிலையம் திரும்ப வேண்டும். அங்கிருந்து 1 மணிக்கு ரெயில் புறப்படும். இரவு டெல்லி வந்தடையும் விதமாக ஐ.ஆர்.சி.டி.சி. இப்பயண திட்டத்தை வகுத்துள்ளது.