சுங்கச் சாவடிகளில் நிற்காமல் பயணிக்க உதவும் ‘பாஸ்டாக்’

மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் (இ.டி.சி.) செலுத்தும் முறை

Update: 2019-04-24 05:40 GMT
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் விரைவாக பயணிக்க 6 வழிச் சாலை, நான்கு வழிச் சாலைகள் போடப்பட்டன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலை தங்க நாற்கர சாலைத் திட்டம் போடப்பட்டது. சாலை கட்டமைப்பு திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு 50 கி.மீ. தூரமும் தனியார் நிறுவனத்திடம் விடப்பட்டன. இந்த நிறுவனங்கள் சாலை அமைத்து இவற்றை பராமரித்து வருகின்றன. இதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கச் சாவடிகளில் வரிசையாக நின்று கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும். தொடர்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக வாகனங்களுக்கு ‘பாஸ்டாக்’ எனும் எலெக்ட்ரானிக் அட்டை அளிக்கப்பட்டது. மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டாக் அட்டை செயல்படுவது எப்படி அதன் பயன்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

2014-ம் ஆண்டு முதல் முறையாக இது அகமதாபாத்-மும்பை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது. இதையடுத்து டெல்லி-மும்பை மார்க்கத்தில் இது அமல்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் இது புழக்கத்துக்கு வந்தது.

மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் (இ.டி.சி.) செலுத்தும் முறை. இதற்கென தனித்துவமான ரேடியோ அலைவரிசை அட்டை (ஆர்.எப்.ஐ.டி.) பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஆர்.எப்.ஐ.டி. கொண்ட அட்டைகள்தான் பாஸ்டாக் எனப்படுகின்றன. இவற்றை வாகனத்தின் ஜன்னல் பகுதியில் ஒட்டிவைத்தால் போதுமானது. இது பிரீபெய்ட் கார்டைப் போன்றது. இதில் போதிய தொகையை லோட் செய்தால் ஒவ்வொரு சுங்கச் சாவடியைக் கடக்கும்போதும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இதிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.

நாட்டில் மொத்தம் 420 சுங்கச் சாவடிகளில் இந்த பாஸ்டாக் அட்டை ஏற்கப்படுகிறது. இதற்கென தனி பாதையே உள்ளது. இப்பகுதி வழியாக பாஸ்டாக் அட்டை உள்ள வாகனங்கள் எவ்வித இடையூறுமின்றி விரைவாகக் கடந்து செல்ல முடியும். இதனால் காத்திருக்கும் நேரம் குறையும்.

* இந்த அட்டைகளை பயன்படுத்துவோருக்கு 5 சதவீத கேஷ்பேக் சலுகையும் அளிக்கப்படுகின்றன. இந்தத் தொகைக்கு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொள்ள முடியும்.

* எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் மூலமாக அனைத்து பரிவர்த்தனை விவரங்களும் உடனுக்குடன் வந்து சேரும்.

* இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய சுங்கச் சாவடி கட்டண விவரங்களை பெற முடியும்.

* ஆன்லைன் மூலமும் இதை ரீ-சார்ஜ் செய்ய முடியும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மற்றும் நெட் வங்கி மூலமாகவும் இதை ரீ- சார்ஜ் செய்யலாம். பே.டி.எம். மூலமும் இதை ரீ-சார்ஜ் செய்ய முடியும்.

* குறைந்த பட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை ரீ-சார்ஜ் செய்யலாம். இந்த அட்டையை பயன்படுத்த காலகெடு கிடையாது.

* ரீ - சார்ஜ் செய்த தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

* சுங்கச் சாவடிகளைக் கடக்கும் போது பணம் அவசியமாக வைத்திருக்க வேண்டியதில்லை. பாஸ்டாக் இருந்தால் போதுமானது.

* ரூ.1 லட்சம் வரை விபத்து காப்பீடும் இந்த கார்டுக்கு அளிக்கப்படுகிறது.

புதிய கார்களில் இந்த பாஸ்டாக் அட்டை கட்டாயம் இடம்பெறுகிறது. 2017 டிசம்பரிலிருந்து இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளில் இந்த பாஸ்டாக்-ஐ பெறலாம். சுங்கச் சாவடிகளிலும் இதைப் பெறலாம்.

இந்த அட்டையை வாங்குவதற்கு வாகனத்தின் பதிவு சான்று, வாகன உரிமையாளரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படும், அடையாள அட்டை (டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்டவை) இவற்றை காட்டி அட்டையை பெறலாம். நகலுடன் உண்மை சான்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் செய்திகள்