ஏ.பி.எஸ். வசதியோடு மஹிந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன
புகை சோதனை விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது
சாகச பயண வாகனமான தார், இப்போது ஏ.பி.எஸ். (ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம்) வசதியோடு ஸ்பெஷல் எடிஷனாக அறிமுகம் ஆகிறது. 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் அனைத்து வாகனங்களும் விபத்து சோதனை (கிராஷ் டெஸ்ட்) சான்று பெற்றிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கிஉள்ளது. முந்தைய தலைமுறை மாடல்கள் அனைத்துமே இத்தகைய சோதனைக்கு உள்படுத்தப்படாதவை.
இதனால் முந்தைய மாடல்கள் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிஷனையே தொடர்ந்து உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுதல் கொண்டதாக ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்பட்டால் சி.ஆர்.டி.இ. என்ஜினை தேர்வு செய்யும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷனில் அலாய் சக்கரங்கள் உள்ளது கூடுதல் சிறப்பாகும். இது முந்தைய மாடலை விட அளவில் பெரியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும் இருக்கும் என்று தெரிகிறது.
அத்துடன் இது பாரத் 6 புகை சோதனை விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை 2020-ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்தாலும் தனது மாடலில் இந்த வசதியை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு அளிக்க மஹிந்திரா திட்டமிட்டு அதை செயல்படுத்தியுள்ளது. இதில் 6 கியர்களைக் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. எஸ்டேட், பண்ணை வீடு மற்றும் சாகச பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் ஏற்றது. இதன் விலை சுமார் ரூ.10 லட்சம்.