3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் புனேயில் மந்தமான வாக்குப்பதிவு

3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் புனேயில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது.

Update: 2019-04-24 00:20 GMT
புனே,

மராட்டியத்தில் நேற்று 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் புனே தொகுதியில் பா.ஜனதா சார்பில் மாநில மந்திரி கிரிஷ்பாபத், காங்கிரஸ் சார்பில் மோகன் ஜோஷி போட்டியில் இருந்தனர்.

தேர்தலையொட்டி புனேயில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவ வீரர்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். ஓட்டுப்போட வசதியாக ஆயிரத்து 997 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதில் பதற்றம் நிறைந்த 91 வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

புனேயில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை நேரத்தில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். அதன்பிறகு வாக்குப்பதிவு மந்தமானது.

மாலை நேரத்தில் மீண்டும் பொதுமக்கள் அதிகளவில் வந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை நேரத்திலும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி புனேயில் 46 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புனே தொகுதியில் 54.11 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மாநிலத்தின் மூத்த மந்திரியான கிரிஷ்பாபத் போட்டியிடுவதால் புனே தேர்தல் களத்தில் பரபரப்பு நிலவி வந்தது. மேலும் இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வில்லை என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்