பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-23 23:39 GMT
கருங்கல்,

பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வாக்களித்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுடைய பெயர்களை தற்போது நீக்கம் செய்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 38 ஆயிரத்து 921 ஆகும். தற்போது கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 பேர் இடம்பெற்றிருந்தனர்.

அதற்கு பிறகு தேர்தலுக்கு சுமார் 5 நாட்களுக்கு முன்பு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் கடலோர பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் காணாமல் போனது. இதனால், அவர்களது வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இது வாக்காளர்களுடைய ஜனநாயக உரிமையை பறிப்பது போன்ற செயலாகும்.

இதுபோல் தேர்தல் நாளான 18-ந் தேதி வரை வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் மறைமுகமாக யாருக்கோ உதவி செய்வது போன்ற இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இப்படி ஒரு ஜனநாயக படுகொலை நிகழ்த்திய மாவட்ட தேர்தல் அதிகாரி மீது மாநில தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிகாரிகளை வீடு வீடாக அனுப்பி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனடியாக சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்