வேலூர் தொரப்பாடியில், கோவிலை அகற்றச்சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வேலூர் தொரப்பாடியில் அம்மன் கோவிலை அகற்றச்சென்ற மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து கோவிலை வேறு இடத்தில் அமைக்க ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.

Update: 2019-04-23 22:59 GMT
வேலூர்,

வேலூர் தொரப்பாடி அவ்வையார்நகரில் உள்ள சீனிவாசன் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தெருவின் முடிவில் அரசு புறம்போக்கு இடத்தில் மாரியம்மன் கோவில் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் தனிநபர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

மேலும் அவர், கோவில் அரசு புறம்போக்கு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அதனை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அம்மன் கோவிலை அகற்றும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி வேலூர் மாநகராட்சி அதிகாரிகள், பாகாயம் போலீசார் கோவிலை அகற்றச் சென்றனர். அதை அறிந்த பொதுமக்கள் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், பொதுமக்களின் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக வாங்கி ஐகோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

அதனை விசாரித்த நீதிபதிகள் மாரியம்மன் கோவிலை அங்கிருந்து அகற்றும்படி வேலூர் மாநகராட்சிக்கு மீண்டும் உத்தரவிட்டனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று காலை கோவிலை அகற்றச் சென்றனர்.

கோவிலை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்துள்ளதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், இந்து அமைப்பினர் சம்பவ இடத்துக்குச் சென்று மாரியம்மன் கோவிலை அகற்றக்கூடாது என அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அங்குச் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோவிலை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அப்பணியை நிறைவேற்ற இடையூறு செய்யாமல் கலைந்து செல்லும்படி கூறினர்.

அதற்கு பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளோ, போலீசாரோ இந்தக் கோவிலை இங்கிருந்து அகற்ற வேண்டாம். கோவிலை நாங்களே, அகற்றி வேறு இடத்தில் வைத்துக் கொள்கிறோம். அதற்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் கோரிக்கையை பொதுமக்களிடம் எழுத்துப்பூர்வமாக வாங்கிக்கொண்டு ஒரு வார காலம் அவகாசம் வழங்கினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்