பஸ் மீது கார் மோதல், சோளிங்கர் தி.மு.க. வேட்பாளர் உள்பட 6 பேர் படுகாயம் - அரவக்குறிச்சி பிரசாரத்துக்கு சென்றபோது விபத்து

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய சென்றபோது பஸ் மீது கார் மோதிய விபத்தில் சோளிங்கர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-04-23 22:00 GMT
ஆற்காடு,

வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஆகிய இருவரும் நேற்று அதிகாலை ராணிப்பேட்டையில் இருந்து அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசார பணிக்கு செல்வதற்காக அரவக்குறிச்சிக்கு காரில் சென்றனர்.

இவர்களை பின்தொடர்ந்து ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான காரில் வேலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், தற்போது நடைபெற்ற சோளிங்கர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிவா, ஆகாஷ், பாலாஜி, வடிவேல் ஆகிய 5 பேரும் சென்றனர். ஆனந்த் என்பவர் காரை ஓட்டினார்.

வேலூர் நோக்கி செல்லும்போது மேல்விஷாரம் அருகே சாலையை கடக்க முயன்ற பஸ் மீது கார் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த தி.மு.க. வேட்பாளர் அசோகன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக படுகாயமடைந்தவர்களை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் ஆற்காடு அருகே முப்பது வெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹேம்நாத் (வயது 29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்