கோவை அருகே பட்டப்பகலில் துணிகரம், என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கோவை அருகே பட்டப்பகலில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு போனது. அந்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சரவணம்பட்டி,
கோவையை அடுத்த சரவணம்பட்டி விசுவாசபுரம் வசந்தம்நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 29). இவர் சரவணம்பட்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விஜய்ஸ்ரீ. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கார்த்திகேயன், விஜய்ஸ்ரீ ஆகியோர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் பணிமுடிந்து மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு, துணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 25 பவுன் நகை, அங்கிருந்த 2 மடிக்கணினி (லேப்டாப்) ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 25 பவுன் நகை மற்றும் மடிக்கணினிகளை திருடி சென்று உள்ளனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் என்ஜினீயர் வீட்டில் திருட்டு நடைபெற்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் 3 திருட்டு குற்றங்கள் நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை விரைந்து கைது செய்து உரிய தண்டனை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.