வாகனங்களில் கட்சி கொடிகள் கட்ட அனுமதி இல்லை மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்

வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள் கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2019-04-23 22:45 GMT

மதுரை,

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நாடு முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் சுங்கச்சாவடிகளை அமைத்து சாலைகளை பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் இந்த பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. அதேபோல விதிகளை மீறி, வாகனங்களில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. எனவே வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள் கட்டிக்கொள்ள அனுமதி உள்ளதா? என்று அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;–

எல்.இ.டி. விளக்கு பொருத்தி தான் பல்வேறு நிறுவனங்கள் வாகனங்களை வெளியிடுகின்றன. வாகனத்தை இயக்கும்போதே இந்த விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் இந்த விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடியை கட்டி கொள்வது, தங்களின் தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வதற்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்