மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரிதாபம், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

காவேரிப்பட்டணம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-04-23 22:30 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள காவாப்பட்டியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). இவர் அந்த பகுதியில் தட்டுவடை தயாரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் முத்துராயன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சரவணன் (30) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கடையில் வேலையை முடித்து விட்டு 2 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சரவணனை வீட்டில் இறக்கி விடுவதற்காக முனுசாமி மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காவாப்பட்டியில் இருந்து முத்துராயன்கொட்டாய் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் சூறைக்காற்று வீசியது.

இதில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த முனுசாமி, சரவணன் ஆகியோர் மீது விழுந்தது. இதில் அவர்கள் 2 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்