தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.;
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் காளப்பன் (வயது 37), விவசாயியான இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். காளப்பன் நேற்று தனது குடும்பத்தினருடன் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திற்கு வந்தார். அங்கு அவர் திடீரென, மனைவி மற்றும் மகன் மீது மண்எண்ணெய் ஊற்றி விட்டு தானும் தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்து அந்த பகுதியில் இருந்த போலீசார் ஓடி வந்து தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் 3 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். விவசாயி தனது மனைவி, மகனுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காளப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கூறியதாவது:-
எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் எங்கள் ஊரை சேர்ந்த 14 பேர் நிலத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார்கள். அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்தினரை தாக்கி விவசாய கிணறு, மின் மோட்டார் ஆகியவற்றை சேதப்படுத்தினார்கள். நிலத்தில் இருந்த மரங்கள், செடி, கொடிகளையும் வெட்டி சேதப்படுத்தி விட்டனர்.
பின்னர் விவசாய நிலத்தில் இருந்து குடும்பத்தோடு நாங்கள் வெளியேற வேண்டும் என்று எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதனால் மனவேதனை அடைந்து நாங்கள் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். எங்களுக்கு மிரட்டல் விடுக்கும் 14 பேர் மீது நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.