ஆழ்வார்குறிச்சி அருகே பயங்கரம்: பெண் சரமாரி வெட்டிக்கொலை உறவினருக்கு வலைவீச்சு
ஆழ்வார்குறிச்சி அருகே பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடையம்,
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி கல்யாணி (வயது 44). ஜோசப் இறந்து 2 வருடங்கள் ஆகின்றன.
இந்த நிலையில் கல்யாணிக்கும், அக்காள் ஈஸ்வரி, அவருடைய மகள் இசக்கியம்மாள் ஆகியோருக்கும் இடையே குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையில் மீண்டும் இதே பிரச்சினை தொடர்பாக கல்யாணிக்கும், ஈஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாலையில் இசக்கியம்மாளின் கணவர் கருப்பசாமி (23) கல்யாணியிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கல்யாணியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கருப்பசாமி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாஹிர் உசைன், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கல்யாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். தண்ணீர் பிடிக்கும் தகராறில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.