குழந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளி வந்தவர் தந்தையையும் கோடரியால் வெட்டிக்கொன்ற கொடூரம் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
குழந்தையை கொன்ற வழக்கில் கைதாகி விட்டு ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தந்தையையும் கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே காம்பட்டு கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 55). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன் கார்த்திகேயன் (31) தனபாலுடன் வசித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயனுக்கும், ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி கடந்த ஜனவரி 5-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை துண்டு துண்டாக வெட்டி கார்த்திகேயன் கொலை செய்தார். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கார்த்திகேயன் வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து கார்த்திகேயன், தனபாலுடன் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் கோடரியால் தனபாலை கார்த்திகேயன் வெட்டி கொலை செய்தார். தொடர்ந்து அவர் வீட்டிலேயே அமர்ந்து இருந்தார். சத்தம் கேட்டு தனபாலின் வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர், தனபால் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திகேயனை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கார்த்திகேயன் கூறுகையில், ராஜேஸ்வரிக்கும் தந்தை தனபாலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு பிறக்காத குழந்தை எனது சொத்துக்கு வாரிசாக இருக்கக்கூடாது என்று அந்த குழந்தையை கத்தியால் வெட்டி கொலை செய்தேன். ஜெயிலில் இருந்து நான் ஜாமீனில் வந்து வீட்டில் இருந்தபோது மீண்டும் எனது தந்தை எனது மனைவியிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கோடரியால் வெட்டி கொன்றேன் என்றார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
கார்த்திகேயன் குழந்தையை வெட்டி கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் அவர், அவரது தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.