கல்லிடைக்குறிச்சி அருகே பரிதாபம் குளத்தில் மூழ்கி மாணவன் பலி

கல்லிடைக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-;

Update: 2019-04-23 22:30 GMT
அம்பை,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசானம். இவருடைய மகன் முத்துபாலன் (வயது 12). இவன் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று மாலையில் முத்துபாலன், அவனது தம்பி, மற்றொரு சிறுவன் ஆகியோர் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் குளிக்கச் சென்றனர். 3 பேரும் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, முத்துபாலன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான். இதை பார்த்த மற்ற 2 பேரும் அதிர்ச்சி அடைந்து ஊருக்குள் ஓடிச் சென்று தங்களின் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் பதறி அடித்துக் கொண்டு குளத்திற்கு ஓடிவந்தனர்.

குளத்தில் இறங்கி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு முத்துபாலனை பிணமாக மீட்டனர். அவனது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்