மேட்டுப்பாளையம் அருகே, உணவு தேடி வந்தபோது மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு

மேட்டுப்பாளையம் அருகே உணவு தேடி வந்தபோது மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது.;

Update: 2019-04-23 22:00 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லித்துறை காப்புக்காடு அருகில் பாக்குத்தோப்பு ஒன்று உள்ளது. இந்த பாக்குத்தோப்புக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டுயானை ஒன்று புகுந்தது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்கு புகுந்த காட்டு யானை ஒரு பாக்கு மரத்தை முட்டி தள்ளியது. அப்போது பாக்கு மரம் முறிந்து, அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது.

பின்னர் கீழே விழுந்த பாக்கு மரத்தை காட்டு யானை மிதித்தபோது அறுந்து கிடந்த மின்கம்பி காலில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு நேற்று அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ், வனவர் ரவி ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் கால்நடை டாக்டர் வேணுகோபால் வரவழைக்கப்பட்டு, இறந்து கிடந்த காட்டுயானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூறு பாகங்கள் எடுக்கப்பட்டு, ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காட்டு யானையின் உடல் டிப்பர் லாரியில் ஏற்றப்பட்டு, சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அழிந்து வரும் வன உயிரின பட்டியலில் உள்ள ‘பாரு‘ கழுகுகளின் இரைக்காக வைக்கப்பட்டது. இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் மின்சார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்