திருப்பூர் வெங்கமேடு அருகே சாக்கடை கால்வாயில் சென்ற சாயக்கழிவுநீர்

திருப்பூர் வெங்கமேடு அருகே சாக்கடை கால்வாயில் சாயக்கழிவு நீர் சென்றது. மழைபெய்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திறந்து விட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2019-04-23 23:00 GMT

அனுப்பர்பாளையம்,

தொழில் நகரமான திருப்பூரில் முக்கிய நீர் நிலைகளாக நொய்யல் ஆறு மற்றும் நல்லாறு உள்ளன. ஆனால் அதில் மழை காலங்களில் கூட தண்ணீர் செல்வதை பார்க்க முடியாது. மாறாக சாக்கடை கழிவு நீர் மற்றும் சாயக்கழிவுநீர் அடிக்கடி திறந்து விடப்படுவதை காண முடியும். குறிப்பாக மழை காலம், அரசு விடுமுறை நாட்கள், அதிகாலை போன்ற நேரங்களில் சாயக்கழிவு நீர் சட்ட விரோதமாக நீர் நிலைகளில் திறந்து விடப்படுகிறது.

இதுமட்டுமின்றி நகரில் உள்ள சாக்கடை கால்வாய்களிலும் அவ்வப்போது சாயக்கழிவுநீர் பாய்வது வாடிக்கையாக உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும், இதை தடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. பொதுமக்கள் புகார் தெரிவிக்க அழைத்தாலும் செல்போன் அழைப்பை எடுப்பதில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் சட்ட விரோதமாக சாயக்கழிவுநீரை திறந்து விட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை தொடர்ந்து அந்த சாக்கடை கால்வாயில் ஆரஞ்சு, நீலம், கருப்பு, பச்சை என பல நிறங்களில் சாயக்கழிவு நீர் சென்று கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிக்குமார் இதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்காக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன்பின்னர் அவர் கிராம நிர்வாக அதிகாரி, மாவட்ட கலெக்டர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் ஆகியோருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். ஆனாலும் நீண்ட நேரமாக சாயக்கழிவு நீர் தொடர்ந்து சாக்கடை கால்வாயில் பாய்ந்து கொண்டிருந்தது. திருப்பூரில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சாக்கடை கால்வாய்களில் இதுபோன்று சட்ட விரோதமாக சாயக்கழிவு நீரை திறந்து விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை கண்டுகொள்ளாமல் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்