சொத்துகள் அனைத்தும் அடமானம் வைக்கப்பட்டுள்ளதால் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அரசு போக்குவரத்து கழகம் பணியாளர்கள் சம்மேளம் குற்றச்சாட்டு

அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அசையா சொத்துகள் அனைத்தும் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டி உள்ளது.

Update: 2019-04-23 22:00 GMT

தாராபுரம்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் திருப்பூர் மண்டல பொதுக்குழு கூட்டம் தாராபுரம்–உடுமலை ரோட்டில் உள்ள தனியார் மண்டப்பத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மண்டல தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பாலகிருஷ்ணன், மாநில செயல் தலைவர் திருமலைசாமி, மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன், மாநில அமைப்பு செயலாளர் கர்த்திகேயன், மாநில பொருளாளர் குணசேகரன் மற்றும் மண்டல நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த 30 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, நிதி நெருக்கடி படிப்படியாக அதிகரித்துவிட்டது. அதன் விளைவு பஸ்களை பராமரிக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் பணியாளர்களுக்கு சம்பளம், ஓய்வுக்கால பலன்கள் போன்றவைகளை வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து கழகத்தின் அசையா சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதால், கடுமையான நிதி நெருக்கடியில் போக்குவரத்து கழகம் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிற மாநில போக்குவரத்து நிர்வாகம் செலுத்தாத வரிகளை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.1,850 கோடி வரியாக செலுத்துகிறது. மின்சார வாரியத்தை போல் போக்குவரத்து கழக வரவு–செலவுகளை முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டு தோறும் பட்ஜெட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். 240 நாட்கள் பணி முடிந்த பணியாளர்களை 3ஆண்டுகள் ஆகியும் பணிநிரந்தரம் செய்யவில்லை. அந்த பணியாளர்கள் அனைவரையும், முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் இயக்கப்பணி செய்ய வேண்டும் என நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. இதை உடனடியாக தவிர்க்க வேண்டும். பணியாளர்கள் இயக்கப்பணி செய்ய நேர்ந்தால் 8 மணி நேர பணியை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்துப் பிரிவு பணியாளர்களுக்கும் பிரதிமாதம் முதல் தேதியில் ஊதியம் வழங்கிட வேண்டும். பணியாளர் சதவீதம் மிகக்குறைவாக இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு பணியாளர்களின் சதவீதத்தை 10 மடங்கு உயர்த்திட வேண்டும்.

போக்குவரத்து கழகத்தை அரசு துறையாக்கி, பென்சனை அரசே ஏற்று வழங்கிட வேண்டும். விருப்ப ஓய்வுபெற 50 வயது அல்லது 20 வருட பணிக்காலம் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் நிபந்தனையாக்கிட வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கழக நிர்வாகமும், அரசும் முற்றிலும் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்