குப்பைகளை கொட்ட வாகனங்கள் செல்வதற்கு வசதியாக குப்பைக்கிடங்கில் 15 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் இடிப்பு

குப்பைகளை கொட்ட வாகனங்கள் செல்வதற்கு வசதியாக குப்பைக்கிடங்கில் 15 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-04-23 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. 21 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 50 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தினமும் 120 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் நுழைவு வாயில் பகுதியில் கூட குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.

குப்பைகள் கொட்டுவதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு மலைபோல் தேங்கி கிடக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த 21-ந் தேதி குப்பைகளில் பிடித்த தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படாததால் புகை வந்து கொண்டே இருக்கிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினாலும் புகை மூட்டம் காரணமாக வாகனங்களை டிரைவர்களால் ஓட்டி செல்ல முடியவில்லை.

இதனால் குப்பைகள் ஏற்றி வந்த வாகனங்கள் சாலையோரம் வரிசையாக காத்திருந்தன. நேற்றும் வாகனங்கள் காத்திருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்தனர். அதாவது குப்பைக்கிடங்கில் பின்புற பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு வசதியாக 15 அடி நீளத்திற்கு குப்பைக்கிடங்கின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. பின்னர் அந்த வழியாக வாகனங்கள் எல்லாம் குப்பைக்கிடங்கிற்கு வரிசையாக சென்று குப்பைகளை கொட்டி விட்டு திரும்பி வந்தன.

தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அகற்றியதைபோல் தஞ்சையிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பைகள் கொட்ட இடம் இல்லாமல் வாகனங்கள் காத்திருப்பது, குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்