சஞ்சய் நிருபம் கூட்டத்தை வீடியோ எடுத்த தேர்தல் அதிகாரியை தடுத்த காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் கைது

சஞ்சய் நிருபம் கூட்டத்தை வீடியோ எடுத்த தேர்தல் அதிகாரியை தடுத்த காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-04-22 23:20 GMT
மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சய் நிருபம் போட்டியிடுகிறார். இவரது தேர்தல் பிரசார கூட்டம் கடந்த 5-ந்தேதி அந்தேரியில் உள்ள ஒரு அரங்கில் நடந்தது. அந்த கூட்டத்தை கண்காணிக்க தேர்தல் அதிகாரி ஆர்.போஸ்லே சென்று இருந்தார்.

அவரது உதவியாளர் ஒருவர் அந்த கூட்டத்தை வீடியோ படம் எடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வீடியோ எடுத்த தேர்தல் அதிகாரியின் உதவியாளர் குடிபோதையில் இருப்பதாக கூட்டத்தில் இருந்தவர்களிடம் வதந்தியை கிளப்பினர்.

இதனால் அவரை வீடியோ எடுக்கவிடாமல் தொண்டர்கள் தடுத்தனர். மேலும் அவர் எடுத்த வீடியோவை கட்டாயப்படுத்தி அழிக்க வைத்தனர். மேலும் அவர்கள் அங்கு பணியில் இருந்த போலீசார், தேர்தல் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து சிறைப்பிடித்தனர்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஆர்.போஸ்லே மற்றும் போலீசார் அம்போலி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் காங்கிரஸ் தொண்டர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் காதாருதீன் முகமது, நசீர்கான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்