பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சொல்கிறார்

கட்சி மேலிடம் அனுமதி அளித்தால் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

Update: 2019-04-22 22:49 GMT
பெங்களூரு,

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆக தேர்வானார். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி களமிறங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான மல்லிகார்ஜூன கார்கே, மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கலபுரகி தொகுதியில் உள்ள சகாபாத் டவுனில் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது கூறியதாவது:-

கலபுரகி தனித்தொகுதியாக உள்ளது. பொதுத்தொகுதியாக இல்லை. இதனால் நரேந்திர மோடியால் கலபுரகி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட முடியாது. ஆனால் என்னால் பொதுத்தொகுதியில் போட்டியிட முடியும். இதனால், காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்து டிக்கெட் வழங்கினால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருக்கிறேன். என்னை எதிர்த்து கலபுரகியில் போட்டியிடும் உமேஷ் ஜாதவ், மோடியின் பெயரை கூறி வாக்கு சேகரிக்கிறார். கலபுரகியில் மோடி போட்டியிடுகிறாரா?. இல்லை உமேஷ் ஜாதவ் போட்டியிடுகிறாரா?. உமேஷ் ஜாதவின் இத்தகைய பிரசாரம் அப்பாவை காண்பித்து மகனுக்கு பெண் கேட்பது போல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்