அரசு கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மாணவ, மாணவிகள் குவிந்தனர்

தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. இதனை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Update: 2019-04-22 23:00 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. பொன்விழா கண்ட இந்த கல்லூரியில் கரூர், பசுபதிபாளையம், ராயனூர், மணவாடி, வெள்ளியணை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5,000 பேர் படித்து வருகின்றனர். கடந்த 19-ந்தேதி பிளஸ்-2 மாணவ, மாணவிகள் தேர்வு முடிவு வெளியானது. இதைத்தொடர்ந்து தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை அறிவியல், வணிகவியல், இளம் வணிக நிர்வாகவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22-ந்தேதி முதல் வினியோகிக்கப் படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதன் பேரில் நேற்று மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடனும், நண்பர்களுடனும் ஆர்வத்துடன் வந்து கல்லூரியின் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பத்தினை பெற்று சென்றனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிசந்திரன் விண்ணப்ப வினியோகத்தினை தொடங்கி வைத்தார். ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் அதற்குரிய சாதி சான்றிதழின் நகலை சமர்ப்பித்து கட்டணமின்றி விண்ணப்பத்தினை பெற்று சென்றனர். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜன், கண்காணிப்பாளர் கோவிந்தசாமி, உதவி பேராசிரியர் லட்சுமணசிங் மற்றும் ஊழியர்கள் பிரகாஷ், காயத்ரி ஆகியோர் விண்ணப்ப வினியோக பணியில் ஈடுபட்டனர்.

கலை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் வருகிற மே மாதம் 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் மே 15-ந்தேதியிலிருந்து பாட வாரியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தற்போது என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளின் மீதான மோகம் மாணவர்களிடையே குறைந்து வருவதாலும், அது போன்ற படிப்புகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது என கருதுவதாலும் பலரும் கலை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்றாற்போல் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பயில முதல் நாளிலேயே மாணவ, மாணவிகள் குவிந்ததை பார்க்க முடிந்தது. 

மேலும் செய்திகள்