பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
குடிநீர் கேட்டு, பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் 39-வது வார்டு பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டு கக்ளஞ்சாவடி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் வார்டில் உள்ள ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிட்டதால் குடிநீர் இன்றி அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
எனவே தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள், பல்லாவரம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். கடந்த 5-ந்தேதி அதிகாரிகளை நேரில் சந்தித்தும் இது தொடர்பாக கோரிக்கை மனு வழங்கியதாக கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 39-வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், தங்களுக்கு குடிநீர் வழங்க கேட்டு நேற்று பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.