பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு சேலம் மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.;
சேலம்,
சேலம் பள்ளப்பட்டி அருகே பொன்னாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாலு என்கிற பாலமுருகன் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுபற்றி தனது கணவரிடம் அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், ஆட்டோ டிரைவர் பாலமுருகனை கண்டித்துள்ளார். ஆனால் அதை அவர் கேட்காமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்தநிலையில், 30.12.2013 அன்று சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரது கணவரும் ராவணேஸ்வரா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த, பாலமுருகன், தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்து, உடல் பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்ய முயன்றார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.