முதியவரை துப்பாக்கியால் சுட்ட ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு
முதியவரை துப்பாக்கியால் சுட்ட ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மில்மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரளா (22). கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரளா பனகமுட்லுவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
அவரை அழைத்து வருவதற்காக சரவணன் கடந்த 6.8.2012 அன்று சென்றார். அங்கு ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த சரவணன் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார். அப்போது குண்டு அருகில் இருந்த சரளாவின் தாத்தா சூடப்பன் (70) மீது பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து சூடப்பன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சரவணனை கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி தாக்குதல் குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், கட்ட தவறினால் ஒரு மாத சிறையும், கொலை முயற்சிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், வெடிபொருள் தடை சட்டத்தின் கீழ் துப்பாக்கியை பயன்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.