மாரண்டஅள்ளி அருகே பரபரப்பு: குழந்தைகளுடன் பெண்ணை வீட்டுக்குள் பூட்டிய உரிமையாளர் கைது

மாரண்டஅள்ளி அருகே குழந்தைகளுடன் பெண்ணை வீட்டுக்குள் பூட்டிய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-22 22:30 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள செவத்தாம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி கோதாவரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். சின்னசாமி, அதேபகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சின்னசாமி(வயது45) என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.1 லட்சம் கொடுத்து விட்டு 3 ஆண்டுக்கு ஒப்பந்தத்தில் குடியிருந்து வருகிறார். கட்டிட மேஸ்திரி சின்னசாமி பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருவதால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கோதாவரி 3 குழந்தைகளுடன் செவத்தாம்பட்டியில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் வீட்டு உரிமையாளரான சின்னசாமி, கோதாவரியிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறி வந்துள்ளார். அதற்கு வாடகை ஒப்பந்தம் போட்டு ஒரு ஆண்டு தான் ஆகிறது. இன்னும் 2 ஆண்டுகள் குடியிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து வீட்டை காலி செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டு உரிமையாளர் சின்னசாமி நேற்று முன்தினம் 3 குழந்தைகளுடன் கோதாவரியை வீட்டுக்குள் வைத்து பூட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போனில் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டை உடைத்து குழந்தைகள் மற்றும் பெண்ணை மீட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளர் சின்னசாமியை கைது செய்தனர். குழந்தைகளுடன் பெண்ணை வீட்டுக்குள் வைத்து பூட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்