கொடைக்கானலில், ஐகோர்ட்டு உத்தரவை மீறி தங்கும் விடுதி திறப்பு - மீண்டும் ‘சீல்’ வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கொடைக்கானல் நகரில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை மீறி தங்கும் விடுதி மீண்டும் திறக்கப்பட்டது. இதுகுறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து தங்கும் விடுதிக்கு நகராட்சி அதிகாரிகள் மீண்டும் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் உரிய அனுமதி பெறாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும் கட்டப்பட்ட 286 தங்கும் விடுதிகளை மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதனிடையே காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி ஏற்கனவே பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அந்த தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாமல் மீண்டும் வேறு வழியாக தங்கும் விடுதியை திறந்து நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவின்பேரில், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தங்கும் விடுதியை சோதனை செய்தனர்.
அப்போது ஏற்கனவே வைக்கப்பட்ட ‘சீல்’ உடைக்கப்படாமல் வேறுவழி மூலம் தங்கும் விடுதியை திறந்து நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள கடையில் இருந்து மின் இணைப்பு பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அந்த தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அத்துடன் மின்இணைப்பு வழங்கிய கடையின் மின் இணைப்பை துண்டித்ததுடன், நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், ‘ஐகோர்ட்டு உத்தரவின்படி ‘சீல்’ வைக்கப்பட்ட தங்கும் விடுதியை உரிமையாளர்கள் மாற்று வழியில் திறந்து நடத்தினர். இதுதொடர்பாக புகார் வந்ததையடுத்து அந்த தங்கும் விடுதி மீண்டும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த தங்கும் விடுதிக்கு மின் இணைப்பு கொடுத்த கடையின் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து அந்த தங்கும் விடுதியினை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.‘சீல்’ வைக்கப்பட்ட தங்கும் விடுதியை மீண்டும் திறந்து நடத்திய சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.