எரியோட்டில், ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி- 6 பேர் காயம்
வேடசந்தூர் அருகே, எரியோட்டில் ஆட்டோ கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் இருந்து நேற்றுமாலை எரியோடுக்கு ஒரு ஆட்டோ பயணிகளுடன் புறப்பட்டு வந்தது. ஆட்டோவை கருவார்பட்டியை சேர்ந்த வேல்முருகன்(வயது 29) என்பவர் ஓட்டினார். இதில் ஈ.குரும்பபட்டியை சேர்ந்த லோகநாதன் மனைவி லட்சுமியாதிபதி(30) உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர்.இந்த ஆட்டோ, எரியோட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரைவீரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் ரோட்டை கடந்தார். எனவே அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை வேல்முருகன் திருப்பினார். இதில் எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்தது.
அதையொட்டி ஆட்டோவிற்கு கீழே லட்சுமியாதிபதி சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆட்டோவில் வந்த மற்ற 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து லட்சுமியாதிபதியின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.