கல்வித்துறை அதிகாரி வீட்டில் 27 பவுன் நகை, பணம் கொள்ளை

மதுரையில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் 27 பவுன் நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-04-21 22:50 GMT
மதுரை,

மதுரை விராட்டிப்பத்து எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் தூத்துக்குடியில் கல்வித்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சென்னையில் வசித்து வருகிறார்.

சென்னையில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகேசன் குடும்பத்துடன் அங்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து நேற்று மதுரை திரும்பினார்.

வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 27 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக உடனடியாக முருகேசன் எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் திருடர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் திருடர்களின் முகம் பதிவாகி இருக்கிறதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்