200 பேரிடம் ரூ.9¾ லட்சம் மோசடி உடற்பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு வலைவீச்சு

200 பேரிடம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த உடற்பயிற்சி மைய உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2019-04-22 03:55 IST
மும்பை,

200 பேரிடம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த உடற்பயிற்சி மைய உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உடற்பயிற்சி மையம் மூடல்

மும்பை போரிவிலியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வந்தவர்கள் கிரிஷ் மற்றும் ஜோத்சனா. இவர்களுடைய உடற்பயிற்சி மையத்தில் உறுப்பினராக மும்பையை சேர்ந்த பவன் வர்மா என்பவர் சேர்ந்தார். இதற்காக அவர் முன்பணமாக ரூ.26 ஆயிரத்து 500-ஐ உரிமையாளர்களான கிரிஷ் மற்றும் ஜோத்சனா ஆகியோரிடம் கொடுத்து இருந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் உடற்பயிற்சி மையம் மூடப்பட்டு இருந்தது. இது பற்றி பவன் வர்மா உரிமையாளர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் பராமரிப்பு பணி காரணமாக உடற்பயிற்சி மையம் 15 நாட்கள் மூடப்பட்டு இருப்பதாகவும், இதன்பின்னர் இயங்க இருப்பதாக தெரிவித்தனர்.

200 பேரிடம் மோசடி

இதனை நம்பிய பவன் சர்மா 15 நாள் கழித்து மீண்டும் உடற்பயிற்சி மையத்துக்கு சென்றார். அப்போதும் உடற்பயிற்சி மையம் மூடப்பட்டு இருந்தது. இதுபற்றி அவர் உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் ‘சுவிச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவன் வர்மா இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில், கிரிஷ் மற்றும் ஜோத்சனா இருவரும் இதேபாணியில் 200 பேரிடம் இருந்து முன்பணமாக ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உடற்பயிற்சி மைய உரிமையாளர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்