வெற்றி பெறபோவது யார்? மண்டியாவில் ஜோராக நடக்கும் தேர்தல் சூதாட்டம் கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
கர்நாடகத்தில் 2 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக கடந்த 18-ந்தேதி பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.;
மண்டியா,
கர்நாடகத்தில் 2 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக கடந்த 18-ந்தேதி பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலில் அனைவரின் பார்வையும் மண்டியா தொகுதி மீது தான் இருந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், அவரை எதிர்த்து சுேயச்சையாக மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதாவும் போட்டியிட்டுள்ளனர். சுமலதாவுக்கு பா.ஜனதா மற்றும் நடிகர்கள் யஷ், தர்ஷன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தான் மண்டியா தொகுதி மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமாகும்.
நிகில் குமாரசாமிக்கும், சுமலதாவுக்கும் மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருந்தது. இதனால் மண்டியா தொகுதியில் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.
மேலும் மண்டியா தொகுதியில் வெற்றி பெறபோவது யார்? என்ற சூதாட்டமும் ஜோராக நடந்து வருகிறது. இந்த சூதாட்டத்தில் ஏராளமானோர் விவசாய நிலங்கள், பணம், கால்நடைகள், வாகனங்கள் மற்றும் பொருட்களை பிணயமாக வைத்துள்ளனர். இதைத்தவிர பெரிய தொகையும் சூதாட்டத்தில் புழக்கமாக உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் மண்டியாவில் தேர்தல் சூதாட்டம் ஜோராக நடப்பது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியவந்துள்ளது. அவருடைய உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாஷ் தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவர், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் தேர்தல் சூதாட்டம் நடக்கிறதா? என்பதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல, எங்காவது சூதாட்டம் நடப்பது தெரியவந்தால், மக்களுக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுகொண்டுள்ளார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், தேர்தல் சூதாட்டம் நடப்பதை தடுக்க முடிந்த வரை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூதாட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.