சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரம், கலெக்டர் அலுவலகத்தில் முத்தரையர் சங்கத்தினர் முற்றுகையிட்டு மனு

சமூக வலைத்தளத்தில் சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக முத்தரையர் சங்கத்தினர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

Update: 2019-04-21 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட முத்தரையர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வேலுச்சாமி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் முத்தரையர் சமூகத்தினர் அமைதியான முறையில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக விரோதிகள் 2 பேர் முத்தரையர் சமுதாய மக்களையும், பெண்களையும் மிகவும் இழிவான வார்த்தைகளால் பேசி அதனை சமூக வலைத்தளத்தில் ஆடியோ பதிவாக வெளியிட்டுள்ளனர். இதனால் முத்தரையர் சமூக மக்கள் மன வேதனைஅடைந்துள்ளனர்.

தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே கீழ்த்தரமாக பேசி ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை தமிழக அரசும், போலீஸ் துறையும் உடனடியாக கைது செய்வதுடன் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இந்த சர்ச்சையான ஆடியோ பதிவை உடனடியாக நீக்க வேண்டும். அந்த சமூக விரோதிகளை கைது செய்யும் வரை தமிழகம் முழுவதும் அறவழி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்