கலபுரகி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

கலபுரகி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Update: 2019-04-21 22:30 GMT
பெங்களூரு, 

கலபுரகி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுகிறார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்களுக்கு தெரியும்

கலபுரகி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் உமேஷ் ஜாதவ் வெற்றி பெறுவார் என்ற ஒரு போலியான செய்தியை பா.ஜனதா மிகைப்படுத்தி உருவாக்குகிறது. பண பலத்தை தாண்டி, நான் வெற்றி பெறுவது உறுதி. ஏனென்றால் நான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த தொகுதியில் சேவையாற்றியுள்ளேன். என்னை மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மத்திய பல்கலைக்கழகம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், திறன் மேம்பாட்டு மையங்கள் என பல்வேறு திட்டங்களை கலபுரகியில் அமல்படுத்தியுள்ளேன். அதனால் எனக்கு எதிராக பா.ஜனதா உருவாக்கும் போலி செய்தி, எந்த பலனையும் தராது.

பாபுராவ் சின்சனசூர்

மாலிகையா குத்தேதார், உமேஷ்ஜாதவ் உள்ளிட்ட 3 நிர்வாகிகள் பா.ஜனதாவுக்கு தாவியதால், காங்கிரசின் வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் நான் கட்சியின் கொள்கை அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறேன். இந்த கொள்கை, தனிநபர் துதிபாடுதல் மற்றும் பிரதமர் மோடியின் சர்வாதிகார தோரணைக்கு எதிரானது.

காங்கிரசை விட்டு சென்ற நிர்வாகிகள் சிலர் எனது ஆசியால் அரசியலில் வளர்ந்தவர்கள். தேர்தல் நெருங்கி வந்த நிலையில் அவா்கள் ஏன் காங்கிரசை விட்டு விலகி சென்றனர்?. இது எனது தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உமேஷ் ஜாதவ் பணியாற்றி வந்தார். மாலிகையா குத்தேதார் எனது தொகுதியை சேர்ந்தவர். நான் 37 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்த தொகுதியை பாபுராவ் சின்சனசூருக்கு விட்டுக்கொடுத்தேன். மாலகரெட்டி எனது தொகுதியை சேர்ந்தவர் அல்ல.

குடும்ப அரசியல்

எந்த காரணமும் இல்லாமல் அவர்கள் காங்கிரசை விட்டு விலகி சென்றனர். இந்தியர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஏற்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். அரசியலமைப்பை ஏற்பது இல்லை. இது நாட்டுக்கு அபாயகரமானது. அதற்கு பதிலாக மக்கள், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, முன்னேற்றம், மதசார்பற்ற கொள்கையை மக்கள் விரும்புகிறார்கள்.

நான் எனது மகனான மந்திரி பிரியங்க் கார்கேயை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை. காங்கிரஸ் மேலிடம், தான் அவரை இடைத்தேர்தலில் நிற்கவைத்தது. இதில் எனது பங்கு இல்லை. ஆனால் ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், குடும்ப அரசியல் செய்வதாக என்னை குறை கூறுவது சரியல்ல.

நான் எதிர்த்தேன்

எனது மகன் அவராகவே அரசியலுக்கு வந்துள்ளார். இடைத்தேர்தலில் எனது மகனை வேட்பாளராக்கியபோது, அதை நான் எதிர்த்தேன். அப்போது, எங்கள் கட்சி மேலிட தலைவர்கள், பா.ஜனதாவை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? என்று கேட்டனர்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே, சட்டமன்றம், நாடாளுமன்றம் என மொத்தம் இதுவரை 11 முறை தேர்தலை எதிர்கொண்டு, அவற்றில் வெற்றி பெற்று வந்துள்ளார். இது அவருக்கு 12-வது தேர்தல் ஆகும். இதிலும் வெற்றி பெற்று, தோல்வியே சந்திக்காத தலைவர் என்ற பெருமையை தக்க வைத்துக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்