இட்டமொழி அருகே மூதாட்டி கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

இட்டமொழி அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-21 21:15 GMT
இட்டமொழி, 

இட்டமொழி அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மூதாட்டி கொலை

நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரத்தை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மனைவி வசந்தா (வயது 65). இவர்களுடைய மகன் சுரேஷ் (35). இவர் திருமணம் முடிந்து கேரளாவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். குருநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வசந்தா வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு வசந்தா தனது வீட்டிற்கு தூங்க சென்றார். மறுநாள் காலையில் அவர் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

2 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்க நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவிட்டார். அதன்படி வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக் கப்பட்டு உள்ளன. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக பெண் வசிப்பதை நோட்டமிட்டு நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வெங்கட்ராயபுரத்தை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்