இரட்டை கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-21 21:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் பிணம்

தூத்துக்குடி செல்சினி காலனி மெயின் ரோட்டில் ஒரு புறம் உப்பளங்கள் நிறைந்து உள்ளன. மறுபுறம் வீடுகள் வரிசையாக அமைந்து உள்ளன. இந்த வீடுகளுக்கு இடையே உள்ள ஒரு காலி இடத்தில் கடந்த 05-06-15 அன்று ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை கைப்பற்றி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பிரையண்ட்நகரை சேர்ந்த அருணாதேவி(வயது 32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இரட்டை கொலை

இதே போன்று கடந்த 04-06-15 அன்று பழையகாயல் பகுதியில் பிரையண்ட்நகரை சேர்ந்த ராஜகணேசன்(28) என்பவர் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த ராஜகணேசன், அருணாதேவி ஆகிய 2 பேரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து உள்ளனர். அவர்களுக்கு இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரையும் ஒரே கும்பல் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

வாலிபர் சிக்கினார்

இந்த வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் சம்பந்தப்பட்ட சூரங்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கும், ராஜகணேசனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், அதில் கொலை நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்