நாமக்கல் உழவர்சந்தையில் 25 டன் காய்கறிகள் விற்பனை வரத்து குறைவால் விலை அதிகரிப்பு
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 25 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இங்கு காய்கறிகள் வரத்து குறைந்து இருப்பதால், அவற்றின் விலை சற்று அதிகரித்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நாமக்கல் உழவர்சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அவற்றின் விலை அதிகரித்து உள்ளது. விடுமுறை நாளான நேற்று நாமக்கல் உழவர்சந்தைக்கு 25 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்து இருந்தன.
இது குறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது:- கோடை வெயில் காரணமாக நாமக்கல் உழவர்சந்தைக்கு காய்கறிகளின் வரத்து சற்று குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை கடந்த வாரங்களை ஒப்பிடும் போது 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இன்று (நேற்று) 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இந்த காய்கறிகள் ரூ.8 லட்சத்து 23 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 6,340 பேர் வாங்கி சென்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர். வழக்கமாக விடுமுறை நாட்களில் நாமக்கல் உழவர்சந்தைக்கு 28 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.36-க்கும், கத்தரி கிலோ ரூ.36-க்கும், புடலைக்காய் கிலோ ரூ.40-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.50-க்கும், அவரை கிலோ ரூ.30-க்கும், கேரட் கிலோ ரூ.68-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.36-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.100-க்கும், இஞ்சி கிலோ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.25-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.18-க்கும் விற்பனை செய்யப்பட்டன.