தூத்துக்குடியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
ஈஸ்டர் பண்டிகை
கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சாம்பல்புதன் முதல் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
தவக்காலத்தின் இறுதியில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இதில் ஏசு கிறிஸ்துவை சிலுவையை சுமக்கச் செய்து ஊர்வலமாக அழைத்து சென்று சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்பட்டது. அன்று மாலையில் ஏசு கிறிஸ்து உயிர்நீத்ததை உணர்த்தும் வகையில் பிரார்த்தனை முடிந்ததும், ஆலயங்கள் மூடப்பட்டன. ஏசு கிறிஸ்து உயிர்நீத்த 3-வது நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார்.
இந்த நாளை ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பிப்பு பெருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்பு திருப்பலி
தூத்துக்குடியில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி தூத்துக்குடி சின்னக்கோவிலில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது, ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடந்தன. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.