பா.ம.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பா.ம.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2019-04-21 23:15 GMT
நெல்லிக்குப்பம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே எய்தனூர் கிராமத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டு சுவர்களில் பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் வரையப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து கடந்த 19-ந்தேதி மர்மநபர்கள் சிலர் எய்தனூர் கிராமத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்களிடம் வீட்டு சுவர்களில் வரையப்பட்டுள்ள மாம்பழம் சின்னத்தை உடனே அழிக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் மர்மநபர்கள் எய்தனூரை சேர்ந்த வேணுகோபால், அருண் குமார் ஆகியோரை ஆபாசமாக திட்டி தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேணுகோபால் லேசான காயத்துடன் தப்பினார்.

இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க எய்தனூர் கிராமத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எய்தனூரில் பா.ம.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நேற்று நடந்தது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

எய்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58). இவருடைய மருமகன் காமராஜ். பா.ம.க. பிரமுகர். இவர் ஆறுமுகம் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மர்மநபர்கள் சிலர் காமராஜின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர்.

மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த சீதாராமன் என்பவருக்கு சொந்தமான காரையும் பெட்ரோல் ஊற்றி, எரிக்க முயன்றனர்.

அப்போது சீதாராமன் வீட்டின் முன்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் குமுதம் திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்த கரும்பு தோட்டம் வழியாக தப்பி ஓடி விட்டனர்.

இந்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காமராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து விரைந்து வந்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் பொருட்சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்