அமராவதி பகுதியில் சாரல் மழை: பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

அமராவதி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2019-04-21 22:30 GMT
தளி, 

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். திருமூர்த்திமலைப் பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடவும், மலைமீதுள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அருவிக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் முற்றிலுமாக குறைந்து விட்டது. மேலும் பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் தளி அமராவதி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியின் நீர் ஆதாரங்களில் ஓரளவிற்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் சுற்றுலா பயணிகள் பலரும் பஞ்சலிங்க அருவில் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் திருமூர்த்தி மலைப்பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் அங்கு வெப்பத்தின் தாக்குதல் குறைந்ததுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. அத்துடன் பஞ்சலிங்க அருவியின் நீர்வரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டதால் கோவில் பணியாளர்கள் அருவியை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்