உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காவிட்டால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 42 லட்சம் கருவூலத்தில் சேர்க்கப்படும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படா விட்டால் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 42 லட்சம் கருவூலத்தில் சேர்க்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்,
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்ற பணத்தை பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் திருப்பூர் தெற்கு கருவூலத்தில் ரூ.50 லட்சத்து 42 ஆயிரமும், வடக்கு கருவூலத்தில் ரூ.17 லட்சத்து 21 ஆயிரமும், காங்கேயத்தில் ரூ.37 லட்சத்து 57 ஆயிரமும், உடுமலையில் ரூ.24 லட்சத்து 34 ஆயிரமும், பல்லடத்தில் ரூ.17 லட்சத்து 4 ஆயிரமும், தாராபுரத்தில் ரூ.10 லட்சத்து 24 ஆயிரமும், மடத்துக்குளத்தில் ரூ.9 லட்சத்து 46 ஆயிரமும், அவினாசியில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 கோடியே 72 லட்சத்து 92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ரூ.30 லட்சத்து 66 ஆயிரத்து 500 மட்டுமே உரிய ஆவணங்கள் காட்டப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.1 கோடியே 42 லட்சத்து 25 ஆயிரத்து 500 கருவூலத்தில் தான் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்தவர்களுக்கு உடனடியாக பணம் விடுவிக்கப்பட்டது. மாவட்ட திட்ட அலுவலர் தலைமையிலான விடுவிப்பு குழு ஆவணங்களை சரிபார்த்து முறைகேடு இல்லாதபட்சத்தில் பறிமுதல் செய்த அந்த பணத்தை விடுவித்தது.
இந்த நிலையில் ரூ.1 கோடியே 42 லட்சத்திற்கும் மேல் தொகை கருவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள் ளது. உரிய ஆவணங்களை காண்பித்து சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு உரிய ஆவணங்கள் காண்பிக்கப்படவில்லை என்றால் அந்த பணம் அரசு கருவூலத்தில் நிரந்தரமாக சேர்க்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.