பெருந்துறை அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவி பலி

பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-04-21 22:30 GMT
பெருந்துறை, 

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே கைகோளபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45). விசைத்தறி பட்டறைக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயா (39). இவர்களுடைய மகள்கள் கோகிலபிரியா (21), தேன்மொழி (19).

இதில் தேன்மொழி சேலத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் தேன்மொழி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்தார். மோகன்ராஜின் வீட்டின் முன் பகுதியில் பந்தல் போடப்பட்டு உள்ளது. அந்த பந்தலில் மின்விளக்கு பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ள இடம் அருகே துணி காயப்போடுவதற்காக கயிறு கட்டப்பட்டு உள்ளது. அந்த கயிற்றில் தேன்மொழி துணி காயப்போடுவதற்காக நேற்று சென்றார். அப்போது கயிற்றின் அருகே சென்ற மின்ஒயரில் ஈரத்துணி பட்டது. இதனால் தேன்மொழியை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கிவீசப்பட்ட அவர் மயங்கி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனை கவனித்த தேன்மொழியின் தந்தை மோகன்ராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தேன்மொழி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, மின்சாரம் தாக்கியதில் இறந்த தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி இறந்த தேன்மொழியின் உடலை பார்த்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்