ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த புலவன்பாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னியம்மன் கோவிலில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர் பொதுமக்களை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் இதுபற்றி களம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பிடிபட்ட வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் அரையாளம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 27) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் பகல் நேரங்களில் கியாஸ் அடுப்பு பழுது பார்ப்பது போன்று கிராமங்களில் உள்ள கோவில்களை நோட்டமிட்டு, இரவில் உண்டியலை உடைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேறு கோவில்களில் எங்கும் திருடி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.