புதுவையில் கொளுத்தும் வெயில்: வெளியில் தலைகாட்ட மக்கள் அச்சம்

புதுவையில் வெயில் கொளுத்தி வருவதால் வெளியில் தலைகாட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.;

Update: 2019-04-20 23:00 GMT
புதுச்சேரி,

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் புதுவையில் வெயில் கொளுத்தி வருகிறது. காலை 9 மணிக்கே வெயிலின் காட்டம் அதிகமாக உள்ளது.

இந்த வெயில் காரணமாக கோடை விடுமுறை விடப்பட்ட நிலையிலும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வந்து விளையாட அஞ்சுகின்றனர். மதிய வேளையில் வெயில் சுட்டெரிப்பதால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

சுற்றுலா பயணிகள்

வெயிலின் வெம்மையை போக்கிட தர்பூசணி, பழச்சாறுகள், ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். வார விடுமுறை நாட்களில் புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுவைக்கு வந்துள்ளனர்.

ஆனால் அவர்களும் வெயிலை பார்த்து அஞ்சி வெளியில் வராமல் ஓட்டலுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மாலை வேளையில் மட்டும் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அவர்கள் வந்து காற்று வாங்குகின்றனர். இதேபோல் உள்ளூர் மக்களும் பகல் முழுவதும் வீட்டிற்குள் முடங்கிய நிலையில் மாலையில் கடற்கரை பூங்கா போன்ற இடங்களுக்கு வந்து காற்று வாங்குகின்றனர்.

ஆள் நடமாட்டமின்றி...

வெயில் கொடுமைக்கு பயந்து காலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்பட்டன. கடற்கரையும் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

வாகனம் ஓட்டி செல்லும் பெண்கள் தங்கள் முகத்தில் துப்பட்டா போன்ற துணி வகைகளை சுற்றியபடி செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் குளிர் கண்ணாடிகள், தொப்பி அணிந்தபடி செல்வதையும் காண முடிந்தது.

மேலும் செய்திகள்