குரும்பலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

குரும்பலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-20 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டான தோப்பு குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் தெருக்குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாதத்திற்கு ஒருமுறை காவிரி குடிநீரும், 15 நாட்களுக்கு ஒருமுறை கிணற்று குடிநீரும் வினியோகிப்படுவதால் தோப்பு குடியிருப்பு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். அவ்வாறு வினியோகம் செய்யும் குடிநீரும் போதுமானதாக இல்லை என்று அந்தப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், அவர்கள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இதனால் ஆத்திரமடைந்த தோப்பு குடியிருப்பு பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று காலை பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசாரும், குரும்பலூர் பேரூராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள், போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். பின்னர் அந்தப்பகுதிக்கு தற்காலிகமாக தெருக்குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்