பொங்கலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி சாவு தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட 2 பேர் மீட்பு

பொங்கலூர் அருகே உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மேலும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட 2 பெண்களை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்.

Update: 2019-04-20 23:15 GMT
பொங்கலூர், 

இது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் பெரிச்சிபாளையம் நால்ரோடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கலா (வயது 38). இவர்களது மகள் சந்தியா(14). செல்வம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கலா கூலி வேலை செய்து மகளை வளர்த்து வந்தார். சந்தியா திருப்பூர் பழனியம்மாள் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் விடுமுறை காரணமாக கொடுவாயில் உள்ள உறவினர் வீட்டுக்கு கலா, சந்தியா மற்றும் உறவினர் சாவித்திரி (37), இவரது மகள் கண்மணி (6) ஆகியோர் சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் நேற்று மதியம் 2 மொபட்டுகளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

வரும் வழியில் அவினாசிபாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல அவர்கள் விரும்பினார்கள். அதன் காரணமாக திருப்பூர்-தாராபுரம் சாலையில் ஆண்டிபாளையம் என்ற இடத்தில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்து விட்டு செல்ல முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கரையில் மொபட்டை நிறுத்தி விட்டு வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். சிறுமி கண்மணி மட்டும் கரையில் நின்றிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கலா வாய்க்கால் நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதை பார்த்த மற்ற 2 பேரும் கலாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

பெண்களின் அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதியினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் சந்தியாவை தவிர மற்ற 2 பேரை அவர்கள் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சந்தியா தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பலர் வாய்க்கால் ஓரமாக சந்தியாவை தேடியபடி சென்றனர். இந்த நிலையில் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சந்தியா சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்னர் கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் உள்ள மதகை பிடித்துக்கொண்டு நிற்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக வாய்க்காலின் உள்ளே இறங்கிய பொதுமக்கள் அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். நீண்ட தூரம் தண்ணீர் அடித்துச்சென்றதால் சந்தியா மயங்கிய நிலையில் இருந்தார். எனவே அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்